Sunday, August 12, 2007

5.கண்டுகொண்டேன்!

கண், காது
கை, கால் என
எல்லாவற்றையுமே
இரண்டாகப்படைத்த இறைவன்
இதயத்தை மட்டும்
ஏன்
ஒன்றாகப்படைத்தான்….

எனது பல நாள் குழப்பம்
இன்றுதான் தீர்ந்தது…

ஆம்…
அந்த இன்னொன்று இருப்பது
உன்னிடத்தில்….

4.பேரிழப்பு

நேற்று
உன் கண்களையே
பார்த்துப் பேசிக்கொண்டிருந்த நான்…..
கையிலிருந்த என்
கவிதைத் தொகுப்பையும்!
தவற விட்டேன்

தயவுசெய்து என்
கவிதைத்தொகுப்பை மாத்திரமாவது
திருப்பிக்கொடு….

3.அன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்!

அன்னை தேசத்தை விட்டு
எண்ணை தேசத்தில்
எரியும் எண்ணற்ற
இந்தியச் சகோதரர்களுக்கு…..

பால் குடிக்கும் குழந்தையையும் மறந்து
பாதி ராத்திரி வரை தன் கணவனின்
தொலைபேசி மணிக்காகக் காத்துக்கிடந்து
மொபைல் போன்களுடனேயே
முழு வாழ்க்கையையும் வாழ்ந்து விடும்
என் தேசத்தின் கற்புக்கரசிகளுக்கு….

தள்ளாத வயதிலும்
தன் தனையன் வரவை நோக்கி
நாழிகைக் கணக்காக
நாட்களைத் தள்ளிக்கொண்டிருக்கும்
என் தாயகத்துத் தாய்மார்களுக்கு…

நிலவைக் காட்டிச் சோறு ஊட்டும்போதெல்லாம்
‘அப்பா எப்பம்மா வருவாரென'க் கேட்கும்
பச்சிளங்குழந்தையின் கண்ணில் படாமல்
கண்ணைக் கசக்கி உயிரைப் பிசைந்துத்
தொண்டை வழியாக தானும் விழுங்கும்
அந்தத் தாயுள்ளத்துக்கு….

வாழ்க்கையில் வளம் சேர்த்து
வாழ்ந்து பார்த்துவிடவேண்டுமென்ற
வைராக்யத்தோடு வையகம் விட்டு
வான்வழியே பறந்துபோய்
பொருள் தேடும் போதையில்
வாழ்க்கையை தொலைத்து விட்ட
என்னைப்போன்ற
எண்ணற்ற சகோதரனுக்கு….

இருக்கும் நாடு
வேறாக இருந்தாலும்
இதயங்கள் என்
இந்தியாவை நோக்கியே….
என்று தாய்நாட்டை எப்போதும்
தாயைப்போல் நேசிக்கும்
என் இந்தியச் செல்வங்களுக்கு…

எத்தனை யுகங்கள்
எந்தெந்த நாட்டில் இருந்தாலும்
என் கடைசி மூச்சு
என் தாய் மடியில்….
என் தாய் மண்ணில்தான்
என்ற வைராக்யத்தோடு
உயிரற்று வாழ்ந்துகொண்டிருக்கும்
உன்னதத் தோழனுக்கு….

அமெரிக்க ‘ஹைவே’யில்
அதிவேகக் கார்களில்
ஆங்கில இசைகளில்
ஆர்ப்பரிக்கச் சென்றாலும்…
ஒற்றையடிப் பாதைகளில்
சைக்கிளில் ‘விசில்’ அடித்துச் சென்றதில்
லயித்துப்போன
என் இந்திய மண்ணை
இன்றுவரை நினைத்து நெகிழ்ந்துபோகும்
நிஜமான மனங்களுக்குத்…....

தெரியும்……………

இந்த உயரின் வலி

ஏ! இந்தியனே!
உன்னைப்பெற்ற
உன் தாய்நாடு கேட்கிறேன்!

மகனே!
நீ எப்போது வருவாய்?
குறைந்தபட்சம்
என் கடைசி நிமிடங்களிலாவது!!

நீ
உன் தாய்த்திரு நாட்டில்
விளக்கேற்ற வரவேண்டாம்…
வீதி வழி போகிற பொழுதுகளிலாவது!!

என் புதல்வனே!
நீ
இழந்தது
வாழ்க்கையை மட்டுமல்ல
உன் தாய்த்திருநாட்டையும்தான்…..

எப்போது வருவாய் மகனே!
இந்தியவை நோக்கி...

கண்ணீருடன் இந்தியத்தாய்…..

2.உயிர் உண்டியல்கள்

அமைதிக்காக
ஆலயத்தினுள்
அறிவுஜீவிகள்….

வயிற்றுக்காக
வாசலில்
வறுமைக்கோடுகள்!

பிச்சைக்காரர்கள்…

1.அன்னையர் தினம்

அதிகாலையில்
அழைத்து வாழ்த்துச் சொன்னால்
அன்னையின்
அயர்ந்த தூக்கம்
கெட்டுவிடும் என்று
அலுவலகம் சென்றவன்
அனுமதி பெற்று
அவசர அவசரமாகக் காரில்
பறந்து வந்தான்....
பார்வையாளர் நேரம் முடிவதற்குள்…

ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!